THAMIL LANKA NEWS

dimarts, 12 de novembre del 2019

3ஆவது நாளாவும் தொடரும் சிறைக்கைதிகளின் போராட்டம்

றோயல் பாக் கொலையுடன் தொடர்புடையவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெலிக்கடை, அங்குனுகொலபெலஸ்ஸ, மற்றும் பூசா ஆகிய சிறைச்சாலைகளில் மரண தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் இன்றும் 3ஆவது நாளான ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், றோயல் பாக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியது போன்று தங்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கமாறு இதன்போது கோரியுள்ளனர்.
மேலும், கடந்த 11ஆம் திகதி முதல் சிறை கைதிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய காலநிலை அறிக்கை!!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும்களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50-75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வென்னப்புவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தாம் விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை நிறைவு செய்ததன் பின்னர் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் இடம்பெறுவதை தவிர்க்க விசேட பாதுகாப்பு படை பிரிவு ஒன்றை ஸ்தாபித்தோம்.பின்னர் அவர்கள் வேறு துறைக்கு மாற்றப்பட்டனர்.
எனினும் அவர்கள் தங்களது புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் பல தகவல்களை வெளிப்படுத்தினார்கள்.
அதற்கு அமைச்சரவையில் இருந்த சிலர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என அவர்களை எச்சரிக்கை விடுத்தனர் .
இவ்வாறான தவறுகள் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது.
இருப்பினும், தமது ஆட்சியின் ஊடாக அந்த நிலையை மாற்றியமைப்போம்.
குறித்த தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளர்.

வரலாற்றில் இன்று 13.11.2019

நவம்பர் 13  கிரிகோரியன் ஆண்டின் 317 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 318 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1002 – இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது சென் பிறைஸ் நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).

1795 – கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர்.
இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.

1851 – வாஷிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர்.

1887 – மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.

1887 – நவம்பர் 11 இல் சிக்காகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர்.
தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.

1918 – ஒட்டோமான் பேரரசின் தலைநகர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றினர்.

1950 – வெனிசுவேலாவின் அதிபர் ஜெனரல் கார்லொஸ் டெல்காடோ சால்போட் படுகொலை செய்யப்பட்டார்.

1957 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.

1965 – அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பகாமசில் மூழ்கியதில் 90 பேர் கொல்லப்பட்டானர்.

1970 – போலா சூறாவளி: கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20ம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது).

1971 – ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க் கோளை சுற்றி வந்தது. இதுவே பூமியை விட வேறொரு கோளைச் சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும்.

1985 – கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லபட்டனர்.

1989 – இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர இராணுவத்தினரால் முதல் நாள் கைது செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1990 – உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது.

1993 – யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

1993 – தவளை நடவடிக்கை: யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் நாகதேவன்துறை இராணுவ, கடற்படைக் கூட்டுத்தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து பல தாங்கிகளையும் விசைப்படகுகளையும் கைப்பற்றினர். மொத்தம் 4 நாட்கள் இடம்பெற்ற இத்தாக்குதலில் 469 புலிகள் இறந்தனர்.
1994 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர்.

1995 – சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர்.
இன்றைய தின பிறப்புகள் : 
354 – ஹிப்போவின் அகஸ்டீன், மெய்யியலாளர், இறையியலாளர் (இ. 430)
1934 – கமால் கமலேஸ்வரன், மேற்கத்திய இசைக் கலைஞர்
1935 – பி. சுசீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
1969 – அயான் கேர்சி அலி, சோமாலியப் பெண்ணியவாதி
1979 – ரான் ஆர்டெஸ்ட், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்
இன்றைய தின இறப்புகள் :
1989 – ரோகண விஜேவீர, இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் (பி. 1943)

2002 – கணபதி கணேசன், மலேசிய இதழாசிரியர் (பி. 1955)

இந்தியக் கடற்படைக்கு ஹெலிகாப்டர்கள் – களத்தில் இறங்கிய நிறுவனங்கள்!!!

இந்தியக் கடற்படைக்கு ஹெலிகாப்டர்கள் தயாரித்து வழங்குவது தொடர்பாக 4 நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன.
இந்தியக் கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் வகையிலும், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் வகையிலும் 111 இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்க கடற்படை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வெளிநாட்டு விமானத் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் உள்நாட்டு நிறுவனங்களையும் களமிறக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இதையடுத்து இலகு ரக ஹெலிகாப்டரை தயாரித்து வழங்க டாடா, அதானி, மஹிந்திரா டிபென்ஸ் சிஸ்டம் மற்றும் பாரத் போர்ஜ் என்ற 4 நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பைச் செலுத்த முன்வந்துள்ளன.
25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்த வாய்ப்பைப் பெறும் நிறுவனம், அமெரிக்காவின் சிகோர்ஷ்கி – லாங்ஹீட் மார்ட்டின் மற்றும் ரஷ்யாவின் ரோஸோபோராநெக்ஸ்பர்ட் ஆகிய ஏதாவது ஒரு நிறுவனத்துடன் இணைந்து ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் என கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சூரியனை கடந்து சென்ற புதன்கிரகம் – நாசா வெளியிட்ட அபூர்வ காட்சி!!!

புதன் கிரகம் சூரியனைக் கடந்து செல்லும் அரிய காட்சியை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ளது.
சூரியனை நேர்கோட்டில் கடக்கும்போது சிறிய அளவிலான கரும்புள்ளி போல புதன் கிரகம் காட்சி அளித்தது. இந்த அரிய நிகழ்வு ஒரு நூற்றாண்டில் 13 முறை மட்டுமே நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதன் கிரகம் சூரியனை, கடந்து செல்லும் போது, புதனின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சி அளித்தது.
இந்தியாவில் கடந்த 1999, 2003, 2006, 2016 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வை திங்களன்று நடைபெற்றது. அடுத்த நிகழ்வு வரும் 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதிதான் காணமுடியும் என வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

நோட்டாவும் (NOTA) நானும்…..!


தேர்தல் திருவிழா எதிர்வரும் 16 ஆம் திகதி நிறைவிற்கு வருகின்றது. இலங்கையில் வாழும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

1947 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தேர்தல் நடைபெற்று வருகின்றது. அதனையடுத்து 1982 ஆம் அண்டு பொது தேர்தல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல், மாகாண சபைகளுக்கான தேர்தல், பிரதேச மற்றும் நகர சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
எனக்கு தெரிந்த பலர் 1947ஆம் ஆண்டு முதல் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். நான் உட்பட 60ஆம் ஆண்டு முதல் தேர்தலில் வாக்களித்து வருகின்றேன்.
இடைநடுவே 28வருடங்கள் நாட்டை விட்டு வெளியேறி வாக்களிக்க முடியாத நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன்.அதனையடுத்து வாக்களிக்கும் தகைமையை பெற்றுகொண்டேன்.
எனினும், ஒரு சில முறை நான் மனசாட்சிக்கு விரோதமாக வாக்களித்திருந்தேன் என்பது கவலைக்குரிய விடயம்.
எதிர்வரும் 16ஆம் திகதி எனது வாக்குரிமையை என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை.
8ஆவது ஜனாதிபதி தேர்தலும் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலில் 35 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.
அதில் 10 முதல் 15 வரையிலான வேட்பாளர்கள் வெற்றுதோட்டாக்களை போன்றவர்கள் (டம்மி பீசஸ்).ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களிக்க என்னால் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியவில்லை.
காரணம்: அவர்கள் தேர்தல் களத்தில் பிரகடனப்படுத்தியுள்ள கொள்கைகள் எதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடியவாறு அமையவில்லை.
மேலும், அனைத்து தமிழ் மக்களும் இதுவரைக்கால வரலாற்றில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்களவருக்கே வாக்களித்து வருகின்றனர்.
அதுமாத்திரமின்றி வாக்குகளைபெற்றுக்கொள்ளும் பெரும்பான்மையினர் நாட்டின் சிறுபான்மையினருக்கு நிலைத்திருக்கும் வகையில் எந்த ஒரு சேவையையும் செய்யவில்லை.
ஆகையினால், எனக்கு எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க வேண்டும் என்ற விருப்பம் கிடையாது.
மனதிற்கு பிடித்த இரண்டே இரண்டு தேர்வுகள் மாத்திரமே எனக்கு காட்சியளிக்கின்றன.
  1. வாக்களிப்பு மத்திய நிலையத்திற்கு சென்று அனைத்து வேட்பாளர்களுக்கும் புள்ளடியிட்டு எது வாக்கினை செல்லுபடியற்ற வாக்காக செய்வது.
  2. வாக்களிப்பு மத்திய நிலையத்திற்கு செல்லாமல் வாக்களிப்பில் இருந்து விலகி கொள்வது.
ஏன்னென்றால் எனது வாக்களிக்கும் உரிமையை நிறைவு செய்வதற்கு நடைபெறவுள்ள இந்த ஜனாதிபதி தேர்தலில் நன்மையை பயக்கும் நல்லதொரு திட்டம் முன்வைக்கப்படவில்லை.
ஆகையினாலேயே எனக்கு தேர்தலில் போட்டியிடும் 35வேட்பாளர்களில் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க மனசாட்சியானது சற்றும் இடம் கொடுக்கவில்லை.
தேர்தலில் விரக்கிதியடைந்த ஒவ்வொரு நபருக்கும் வாக்களிப்பிலிருந்து விலகி தேர்தலை புறக்கணிப்பதற்கு அல்லது பகிஷ்கரிப்பதற்கு ஜனநாயக அடிப்படையில் பல்வேறு நாடுகள் வாக்காளர்களுக்கு N.O.T.A (None Of The Above) என்ற வாக்களிப்பு முறையினை அறிமுகம் செய்துள்ளன.
NOTA என்ற முறையானது இந்தியா, கிறீஸ் நாடுகளிலும் அமெரிக்காவில் உள்ள நிவேடா என்ற மாநிலத்திலும் ஸ்பெயின், வடகொரியா, ரஷ்யா, கொலம்பியா. பங்களாதேஷ், பல்கேரியா ஆகிய நாடுகளில் அமுலில் காணப்படுகின்றன.
கடந்த 2013ஆம் ஆண்டு NOTA முறையை பாக்கிஸ்தானில் அறிமுகப்படுத்த விண்ணப்பிக்கப்பட்ட போதிலும் அந்நாட்டு தேர்தல் ஆணையகம் அதனை முழுமையாக நிராகரித்தது.
சர்வசன வாக்குரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கு மிக சிறந்த உரிமையாகும். எமது வாக்குரிமையை எமது மனதிற்கு பிடித்த விதத்தில் பயன்படுத்த வேண்டும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையுமே பிடிக்கவில்லை என்றால் அதனை வெளிப்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படுதல் வேண்டும்.
ஸ்ரீலங்காவிலும் இந்த முறையை அறிமுகப்படுத்தினால் தேர்தலை புறக்கணிக்கும் அல்லது பகிஷ்கரிக்கும் கணிசமான வாக்காளர்கள் வாக்களிப்பு மத்திய நிலையத்திற்கு வாக்களிக்க சமூகம் தருவார்கள்.