THAMIL LANKA NEWS

dimarts, 12 de novembre del 2019

நோட்டாவும் (NOTA) நானும்…..!


தேர்தல் திருவிழா எதிர்வரும் 16 ஆம் திகதி நிறைவிற்கு வருகின்றது. இலங்கையில் வாழும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

1947 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தேர்தல் நடைபெற்று வருகின்றது. அதனையடுத்து 1982 ஆம் அண்டு பொது தேர்தல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல், மாகாண சபைகளுக்கான தேர்தல், பிரதேச மற்றும் நகர சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
எனக்கு தெரிந்த பலர் 1947ஆம் ஆண்டு முதல் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். நான் உட்பட 60ஆம் ஆண்டு முதல் தேர்தலில் வாக்களித்து வருகின்றேன்.
இடைநடுவே 28வருடங்கள் நாட்டை விட்டு வெளியேறி வாக்களிக்க முடியாத நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன்.அதனையடுத்து வாக்களிக்கும் தகைமையை பெற்றுகொண்டேன்.
எனினும், ஒரு சில முறை நான் மனசாட்சிக்கு விரோதமாக வாக்களித்திருந்தேன் என்பது கவலைக்குரிய விடயம்.
எதிர்வரும் 16ஆம் திகதி எனது வாக்குரிமையை என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை.
8ஆவது ஜனாதிபதி தேர்தலும் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலில் 35 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.
அதில் 10 முதல் 15 வரையிலான வேட்பாளர்கள் வெற்றுதோட்டாக்களை போன்றவர்கள் (டம்மி பீசஸ்).ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களிக்க என்னால் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியவில்லை.
காரணம்: அவர்கள் தேர்தல் களத்தில் பிரகடனப்படுத்தியுள்ள கொள்கைகள் எதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடியவாறு அமையவில்லை.
மேலும், அனைத்து தமிழ் மக்களும் இதுவரைக்கால வரலாற்றில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்களவருக்கே வாக்களித்து வருகின்றனர்.
அதுமாத்திரமின்றி வாக்குகளைபெற்றுக்கொள்ளும் பெரும்பான்மையினர் நாட்டின் சிறுபான்மையினருக்கு நிலைத்திருக்கும் வகையில் எந்த ஒரு சேவையையும் செய்யவில்லை.
ஆகையினால், எனக்கு எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க வேண்டும் என்ற விருப்பம் கிடையாது.
மனதிற்கு பிடித்த இரண்டே இரண்டு தேர்வுகள் மாத்திரமே எனக்கு காட்சியளிக்கின்றன.
  1. வாக்களிப்பு மத்திய நிலையத்திற்கு சென்று அனைத்து வேட்பாளர்களுக்கும் புள்ளடியிட்டு எது வாக்கினை செல்லுபடியற்ற வாக்காக செய்வது.
  2. வாக்களிப்பு மத்திய நிலையத்திற்கு செல்லாமல் வாக்களிப்பில் இருந்து விலகி கொள்வது.
ஏன்னென்றால் எனது வாக்களிக்கும் உரிமையை நிறைவு செய்வதற்கு நடைபெறவுள்ள இந்த ஜனாதிபதி தேர்தலில் நன்மையை பயக்கும் நல்லதொரு திட்டம் முன்வைக்கப்படவில்லை.
ஆகையினாலேயே எனக்கு தேர்தலில் போட்டியிடும் 35வேட்பாளர்களில் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க மனசாட்சியானது சற்றும் இடம் கொடுக்கவில்லை.
தேர்தலில் விரக்கிதியடைந்த ஒவ்வொரு நபருக்கும் வாக்களிப்பிலிருந்து விலகி தேர்தலை புறக்கணிப்பதற்கு அல்லது பகிஷ்கரிப்பதற்கு ஜனநாயக அடிப்படையில் பல்வேறு நாடுகள் வாக்காளர்களுக்கு N.O.T.A (None Of The Above) என்ற வாக்களிப்பு முறையினை அறிமுகம் செய்துள்ளன.
NOTA என்ற முறையானது இந்தியா, கிறீஸ் நாடுகளிலும் அமெரிக்காவில் உள்ள நிவேடா என்ற மாநிலத்திலும் ஸ்பெயின், வடகொரியா, ரஷ்யா, கொலம்பியா. பங்களாதேஷ், பல்கேரியா ஆகிய நாடுகளில் அமுலில் காணப்படுகின்றன.
கடந்த 2013ஆம் ஆண்டு NOTA முறையை பாக்கிஸ்தானில் அறிமுகப்படுத்த விண்ணப்பிக்கப்பட்ட போதிலும் அந்நாட்டு தேர்தல் ஆணையகம் அதனை முழுமையாக நிராகரித்தது.
சர்வசன வாக்குரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கு மிக சிறந்த உரிமையாகும். எமது வாக்குரிமையை எமது மனதிற்கு பிடித்த விதத்தில் பயன்படுத்த வேண்டும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையுமே பிடிக்கவில்லை என்றால் அதனை வெளிப்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படுதல் வேண்டும்.
ஸ்ரீலங்காவிலும் இந்த முறையை அறிமுகப்படுத்தினால் தேர்தலை புறக்கணிக்கும் அல்லது பகிஷ்கரிக்கும் கணிசமான வாக்காளர்கள் வாக்களிப்பு மத்திய நிலையத்திற்கு வாக்களிக்க சமூகம் தருவார்கள்.