THAMIL LANKA NEWS

dijous, 14 de novembre del 2019

கோட்டா ஜனாதிபதியானால் உரிமைகள் ஊமையாகிவிடும்

தமிழ் மக்கள் நிர்ணயிக்கும் சக்தியாக இருப்போம் என்பதை மீண்டும் வெளிக்காட்ட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறும் வாக்களிப்பில் தமிழ் மக்கள் எல்லோரும் சென்று வாக்களிக்க வேண்டும். தமிழ் மக்கள் நிர்ணயிக்கும் சக்தியாக என்றும் இருப்போம் என்பதை நாங்கள் காட்ட வேண்டும்.
கடந்த காலத்தில் தென்னிலங்கை மாற்ற முடியாது என்று நினைத்த நேரத்தில் எங்களுடைய மக்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்தி தென்னிலங்கையின் ஆட்சியாளரை மாற்றக் கூடிய வல்லமை எங்களிடம் இருக்கு என்பதைக் காட்டினோம்.
அதற்கான நிலைமை மீண்டும் உருவாகியுள்ளது. இன்றைய நிலையில் எங்களுடைய உரிமைகளை போராட்டம் ஊடாகச் செய்து வென்றெடுக்க கூடிய வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
கோட்டபாய ராஜபக்ஸ இப்பொழுது வந்தார் என்றால் அவருடைய குடும்ப ஆட்சி தொடர்ச்சியாக இருக்கும். அதைவிடகொடுங்கோல் ஆட்சி எங்கள் தேசத்தில் முளைக்கும்.
இராணுவ பிரசன்னம் கூடுதலாக இருக்கும் நிலையில் அவர்கள் வெளியில் வந்து செயற்படும் நிலை அதிகரிக்கும்.
நாங்கள் எங்களது போராட்டங்களை செய்வதற்கான அனுமதிகள் மறுக்கப்படும். காணிவிடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம் என எங்களது உரிமைகளை பெறுவதற்கான போராட்டத்தின் அனைத்து கதவுகளும் மூடிவிடப்படும்.
எங்களுடைய இலச்சியத்திற்காக, மண்ணுக்காக மரணித்த தியாகிகளின் நினைவு தினங்களை நினைவு கூரமுடியாமல் தடுக்கப்படுவோம்.
மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எதிர்வரும் 27ஆம் திகதி வித்திடப்பட்ட இடங்களில் அஞ்சலி செலுத்தக் கூடிய வாய்ப்பு தற்போது இருக்கிறது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் எமது உறவினர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்திய போது கூட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஆகவே இப்பொழுது இருக்கும் நிலையை மீண்டும் உருவாக்குவதன் ஊடாகத்தான் எங்களுடைய உரிமைப் போராட்டத்தை வெளிக்கொண்டுவர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி: வவுனியா பிராந்திய செய்தியாளர்