THAMIL LANKA NEWS

dilluns, 11 de novembre del 2019

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று………..


சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று இந்திய உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று முற்பகல் 10.30 அளவில் உயர்நீதிமன்றம் வழங்கப்படவுள்ளது.
வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, ஆலோசனைக்கு பின்னர் தீர்ப்பை அறிவிக்க உள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எதிர்வரும் 17ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த தீர்ப்பு இன்று அவரினால் அறிவிக்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் உத்தர பிரதேச அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து சட்ட ஒழுங்கு குறித்து விசாரித்த பின்னர் தீர்ப்பை வழங்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் விஸ்தீரமான நிலத்திற்கு கடந்த 1992ஆம் ஆண்டு முதல் இந்து மற்றும் இஸ்லாமிய தரப்புகள் உரிமை கோரி வருகின்றன.
இந்த நிலையில், அயோத்திக்காக சுமார் 28 ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது.
இது தொடர்பான வழக்கை முன்னதாக விசாரணைக்கு உட்படுத்திய அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு தனது தீர்ப்பை வழங்கியது.
இதனடிப்படையில், வழக்குத் தொடர்ந்த வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் தீர்ப்பில் குறிப்பிட்டது.
குறித்த தீர்ப்பை ஏற்கமறுத்து 14 பேர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்த பிரச்சினையை சமரசம் மூலம் தீர்த்து வைப்பதற்கு உயர்நீதிமன்றம் முயற்சி மேற்கொண்டது.
இதேவேளை, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து தீர்ப்பாயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இதையடுத்து, நாளாந்த வழக்கு விசாரணையாக கடந்த ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி முதல் அயோத்தி வழக்கு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு, கடந்த ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதியுடன் விசாரணை நிறைவுபெற்றபோதும், தீர்ப்பு திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வகையில், குறித்த வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் முக்கியமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அயோத்தி வழக்கில் தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அது எவருடைய வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ இருக்காது என பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.