THAMIL LANKA NEWS

dilluns, 11 de novembre del 2019

இன்று பிரதமர் மோடி பிரேசில் பயணம்….

பிரதமர் மோடி பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார். இரண்டு நாள் மாநாட்டில் 5 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
பொருளாதார ஒத்துழைப்பு, வணிகம் ஆகிய துறைகளில் கூட்டாக பங்களிப்பு அளிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது.
பிரிக்ஸ் நாடுகளின் 11வது மாநாடு பிரேசிலில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுவதையொட்டி, இன்று பிற்பகல் பிரதமர் மோடி பிரேசிலியா நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
இந்த மாநாட்டில் மோடி பங்கேற்பது இது 6வது முறையாகும். எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
தமது பயணத்தின்போது ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை தனித்தனியே பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்.
பிரிக்ஸ் நாடுகளின் தொழில்துறையினர் கூட்டம், பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய அமர்வு, முழுமையான அமர்வு ஆகிய கூட்டங்களில் மோடி பங்கேற்கிறார்.
முக்கிய அமர்வில் தற்கால சூழலில் நாடுகளின் இறையாண்மையை காப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும.
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் 42 சதவீத மக்கள் தொகையைப் பெற்றுள்ள பிரிக்ஸ் நாடுகள், உலகளவிலான உள்நாட்டு உற்பத்தியில் 23 சதவீத அளவுக்கு பங்களிப்பை வழங்கி வருகிறது.